லக்னோவில் காஷ்மீர் பழ வியாபாரிகளை வலதுசாரி அமைப்பினர் தாக்கிய விவகாரம் : 4 பேர் கைது

லக்னோவில் காஷ்மீர் பழ வியாபாரிகளை வலதுசாரி அமைப்பினர் தாக்கிய விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-03-07 10:23 GMT
புல்வாமா தாக்குதலை அடுத்து பல்வேறு பகுதிகளில் காஷ்மீரிகளுக்கு எதிரான தாக்குதல் பதிவாகியது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இப்போது  இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் லக்னோவில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் தாலிகஞ்ச் பகுதியில் உலர் பழங்களை விற்பனை செய்த காஷ்மீர் இளைஞர்களை காவி உடை அணிந்த சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர், இதுதொடர்பான வீடியோ வெளியாகியது. சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

நேற்று மாலை நடைபெற்ற இச்சம்பவத்தின் போது உள்ளூர் மக்கள் காஷ்மீர் இளைஞர்களை, காவி கும்பலிடம் இருந்து காப்பாற்றியுள்ளனர். வீடியோ வைரலான நிலையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது. முதல்கட்டமாக இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளியான பஞ்ராங் சோங்காரை கைது செய்தது. பஞ்ராங் சோங்கார் மீது கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பஞ்ராங் சோங்கார் விஷ்வ இந்து தள கட்சியின் தலைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் ஹிமான்சு கார்க், அனிரூத் மற்றும் அமர் குமாரை போலீஸ் கைது செய்துள்ளது. இளைஞர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதரீதியாக கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல்,  கொலை  முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே போலீஸ் நடவடிக்கை எங்களுக்கு திருப்தியளிக்கிறது என காஷ்மீர் இளைஞர்கள் கூறியுள்ளனர். 

மேலும் செய்திகள்