பாகிஸ்தான் ராணுவம் 10-வது நாளாக தொடர்ந்து எல்லை தாண்டி தாக்குதல் : 2 குழந்தைகளுடன் இளம்பெண் பலி

பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நேற்று 10-வது நாளாக தொடர்ந்து எல்லைதாண்டி தாக்குதல் நடத்தியது. வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் ஒரு இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் பலியானார்.

Update: 2019-03-02 22:39 GMT

ஜம்மு,

காஷ்மீர் புல்வாமாவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் அந்த இயக்கத்தின் முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி அழித்தது.

இந்த சம்பவத்தில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டி தாக்குதல் நடத்திவருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துவருகிறது. ஆனாலும் பாகிஸ்தானின் இந்த தாக்குதல் நிறுத்தப்படவில்லை.

எல்லையில் உள்ள இந்திய ராணுவ நிலைகள், மக்கள் வசிக்கும் கிராமங்கள் மீது சிறியரக மோட்டார் குண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும் தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த வியாழக்கிழமை ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் நடைபெற்ற தாக்குதலில் ஒரு பெண் பலியானார். ராணுவ வீரர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலில் ஈடுபட்டது. இரவு 11 மணிக்கு தான் இந்த தாக்குதல் நின்றது.

இதில் சலோத்ரி கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் பலியானார். ருபானா கோசார் (வயது 24), அவரது மகன் பாஸன் (5), மகள் ‌ஷப்னம் (9 மாதம்) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ருபானாவின் கணவர் முகமது யூனிஸ் படுகாயம் அடைந்தார். 2 ராணுவ வீரர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

10–வது நாளாக நேற்று ரஜோரி மாவட்டம் நவ்ஷெரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் சுமார் 12 மணி நேரம் நீடித்தது. இந்திய ராணுவமும் பதிலடியாக வலிமையான தாக்குதலை நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்த தொடர் தாக்குதல் காரணமாக எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கல்வி நிலையங்களுக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் மோசமான பகுதிகளில் வசித்துவந்த சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். மற்றவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உள்ளூர் நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவமும் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 வீரர்களும், பொதுமக்கள் 2 பேரும் பலியானதாக கூறியுள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள நாகியால் செக்டாரில் நடைபெற்ற தாக்குதலில் அந்த 2 வீரர்களும் பலியானதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்தியா–பாகிஸ்தான் இடையே நடைபெற்றுவந்த சம்ஜோவ்தா எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தை கடந்த மாதம் 28–ந் தேதி பாகிஸ்தான் நிறுத்தியது. இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து இந்த ரெயில் போக்குவரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்கப்படுகிறது. இன்று டெல்லியில் இருந்து இந்த ரெயில் லாகூருக்கு புறப்பட்டு செல்கிறது.

மேலும் செய்திகள்