ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க பிரான்ஸ் தீவிரம்
ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாருக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் தடை விதிக்க பிரான்ஸ் அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
புதுடெல்லி,
அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
காஷ்மீரின் புலவாமாவில் துணை ராணுவப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாத இயக்கம் வெளிப்படையாக பொறுப்பேற்றுக்கொண்டது. ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட இந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை பாதுகாப்பு கவுன்சிலின் கருப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்த வேண்டுகோளுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தபோதும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மசூத் அசாருக்கு எதிராக தடை விதிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த சூழலில் புலவாமாவில் தற்போது நடந்துள்ள பயங்கரவாத தாக்குதலும், அதைத்தொடர்ந்து இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கும் மசூத் அசாரின் கொடூர முகத்தை உலக நாடுகளுக்கு காட்டி இருக்கின்றன. எனவே அவருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் தடை விதிக்கும் தீர்மானத்தை கொண்டுவர அவை நடவடிக்கை எடுத்து உள்ளன.
அந்தவகையில் மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்த்து அவருக்கு எதிராக ஆயுதத்தடை, சர்வதேச பயணத்தடை, சொத்துக்கள் முடக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் பிரான்ஸ், ஐ.நா. பாதுகாப்பு சபையின் பொருளாதார தடை கவுன்சிலை வலியுறுத்தி உள்ளது.
இதைப்போல அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளும் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்த கவுன்சிலை நாடியுள்ளன. 15 உறுப்பினர் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பு மார்ச் 1–ந் தேதி (இன்று) முதல் பிரான்சுக்கு கிடைக்க இருக்கும் நிலையில் இந்த தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதேநேரம் மசூத் அசாருக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்ந்து ஆதரவாக இருந்து வரும் சீனாவும் தற்போதைய தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காது என்றே தெரிகிறது. ஏனெனில் சீனாவின் வூகன் நகரில் சமீபத்தில் நடந்த ஆர்.ஐ.சி. மாநாட்டில் பேசிய அந்த நாட்டு வெளியுறவு மந்திரி வாங் யி, பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் பெருக்கத்தை வேரறுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
அவ்வாறு சீனாவும் ஆதரவு அளித்தால் மசூத் அசாருக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் 13–ந் தேதிக்கு முன் பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இவ்வாறு தடை அமல்படுத்தப்பட்டால் சர்வதேச அளவில் மசூத் அசாருக்கு பெருத்த பின்னடைவு ஏற்படுத்துவதுடன், அவர் மீதும், ஜெய்ஷ்–இ–முகமது அமைப்பு மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு பாகிஸ்தானுக்கும் பெரிய அழுத்தமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.