பா.ஜனதாவுக்கு எதிராக விடிய, விடிய போராட்டம் மம்தா பானர்ஜிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு
பா.ஜனதாவுக்கு எதிராக விடிய, விடிய போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
கொல்கத்தா,
நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய போராட்டம் மேற்கொண்டார். அவருக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தன்னுடைய ஆதரவை தெரிவித்ததுடன், காங்கிரஸ் கட்சி உங்கள் போராட்டத்துக்கு தோள் கொடுக்கும் என்றார். மேலும் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு இது குறித்து கூறுகையில், நரேந்திர மோடியும், அமித்ஷாவும் இந்திய இறையாண்மையை சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேவையில்லாமல் மோதல் போக்கை கடைபிடிக்கின்றனர் என கண்டனம் தெரிவித்தார்.
டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்தேன். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் மேற்கொண்டுள்ள நடவடிக்கை கேலிக்கூத்தானவை, ஜனநாயகத்துக்கு எதிரானவை என்று தெரிவித்து உள்ளார்.
உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பா.ஜனதா குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறது. தேர்தல் வரும் நேரத்தில் சி.பி.ஐ. அமைப்பை வைத்து மிரட்டி பார்க்கிறது. இது அரசியல் அமைப்புக்கு முற்றிலும் எதிரான நடவடிக்கை ஆகும் என்று கூறியுள்ளார்.
பீகார் முன்னாள் முதல்–மந்திரி லாலு பிரசாத் யாதவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மக்கள் அனைவரும் பா.ஜனதாவுக்கு எதிராக உள்ளனர். இதனால் தேர்தல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் மீது சி.பி.ஐ. அமைப்பை பா.ஜனதா அரசு ஏவி உள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. நாங்கள் மம்தா பானர்ஜிக்கு எப்போதும் துணை நிற்போம் என்று தெரிவித்து உள்ளார்.
தேசியவாத கட்சியின் தலைவர் சரத் பவார் டுவிட்டரில், எதிர்க்கட்சிகள் மக்களிடம் அரசியல் செல்வாக்கை பெறக்கூடாது என்ற எண்ணத்தில் சி.பி.ஐ. தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சிகளை பழிவாங்க சி.பி.ஐ. ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பா.ஜனதா அரசு எல்லை மீறி உள்ளது. மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் பேசி என்னுடைய ஆதரவை தெரிவித்தேன் என்று தெரிவித்து உள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி மெகபூபா முப்தி கூறுகையில், பா.ஜனதா கட்சியால் காஷ்மீர் மாநில அரசின் நிலை என்ன ஆனது என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். மம்தா பானர்ஜிக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
இதேபோல் கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவே கவுடா மற்றும் சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மக்களவையில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பா.ஜனதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அதே சமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பதருதாசா தெரிவிக்கையில், பா.ஜனதா அரசு சி.பி.ஐ. அமைப்பை தவறாக பயன்படுத்தி இருக்கிறது என கூறினார். மேலும் அவர் கூறுகையில், மம்தா பானர்ஜியின் போராட்டம் தேவையற்றது. கொல்கத்தா போலீஸ் கமிஷனர் நேர்மையானவர் என்றால் எதற்கு சி.பி.ஐ.க்கு ஒத்துழைக்க மம்தா பானர்ஜி மறுக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.