‘வீட்டை கவனிக்க முடியாதவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது’ : நிதின் கட்கரி சர்ச்சை பேச்சு

வீட்டை கவனிக்க முடியாதவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறினார்.

Update: 2019-02-04 21:55 GMT
நாக்பூர்,

மத்திய மந்திரி நிதின் கட்கரி சமீப காலமாக சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை அடுத்து, புனேயில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், தேர்தல் தோல்விக்கு கட்சி தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சர்ச்சையை கிளப்பினார்.

இதையடுத்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் அடிவாங்குவார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவை அனைத்தும் பிரதமர் மோடியை மனதில் வைத்தே கட்கரி கூறியதாக காங்கிரசார் கூறி வருகின்றனர். மேலும் பிரதமர் பதவிக்கு கட்கரி குறி வைப்பதாகவும் பேச்சு நிலவுகிறது.

இந்த நிலையில் நாக்பூரில் நடந்த பா.ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் முன்னாள் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட நிதின் கட்கரி மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சிக்கும், நாட்டுக்கும் தங்களை அர்ப்பணிக்க விரும்புவதாக கூறும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை அப்படி கூறிய ஒருவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள், உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என கேட்டேன். அவர் நான் கடை நடத்தி வந்தேன். அதுசரிவர செல்லாததால் அதை மூடி விட்டேன். எனது மனைவி வீட்டில் இருக்கிறார், குழந்தைகள் இருக்கிறார்கள் என்றார்.

நான் அவரிடம் முதலில் உங்கள் வீட்டை கவனியுங்கள் என்றேன். காரணம், வீட்டை சரிவர நிர்வகிக்க முடியாதவரால் நாட்டையும் நிர்வகிக்க முடியாது. குழந்தைகளை சரியாக பார்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் உழையுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்