காவிரியில் மேகதாது அணையைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறு மத்திய அரசிடம் கர்நாடக அரசு அறிக்கை

காவிரியில் மேகதாது அணையைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-09-04 08:19 GMT
புதுடெல்லி

காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்சினை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கை குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் கடந்த வாரம் தகவல் அனுப்பியதாகத் தெரிகிறது. மேலும், திட்டம் குறித்து மாநிலங்களிடையே விளக்கக் கூட்டத்தை கர்நாடக அரசு விரைவில் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த இரண்டு வாரங்களில் இதுகுறித்த தெளிவான நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக டெல்லியில் மத்திய நீர்வள ஆணையத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்