மனைவிகளின் கொடுமைகளில் இருந்து கணவர்களை காக்க தனியாக ஆணையம் அமைக்க பா.ஜனதா எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மனைவிகளின் கொடுமைகளில் இருந்து கணவர்களை காக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2018-09-02 10:13 GMT

புதுடெல்லி,


சட்டங்களை தவறாக பயன்படுத்தி கணவன்களை கொடுமை செய்யும் மனைவிகள் மீது ஆண்கள் கொடுக்கும் புகாரை விசாரிக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று பா.ஜனதாவை சேர்ந்த இரு எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளார்கள். உத்தரபிரதேச மாநில பா.ஜனதா எம்.பி.க்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா, இதுதொடர்பாக ஆதரவை திரட்ட இம்மாதம் 23-ம் தேதி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஏற்கனவே இவர்கள் இப்பிரச்சனையை பாராளுமன்றத்தில் எழுப்பியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹரிநாராயன் ராஜ்பர் பேசுகையில் “மனைவிகளால் ஆண்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள். இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளது. பெண்களுக்கு நீதி கிடைக்க சட்டம் மற்றும் ஆணையம் உள்ளது, ஆனால் ஆண்களுக்கென்று இதுவரையில் அப்படி கிடையாது. தேசிய பெண்கள் ஆணையம் போன்று ஆண்களுக்கு என்றும் தனியாக ஆணையம் அமைக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார். தேசிய ஆண்கள் ஆணையத்தையும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழுவில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் அன்சுயல் வர்மா. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498ஏ-யில் திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது. கணவன்மார்கள் மற்றும் அவருடைய உறவினர்களால் பெண்கள் வரதட்சணை போன்ற கொடுமைப்படுத்தப்படுதல் இப்பிரிவில் அடங்குகிறது. இந்த சட்டப்பிரிவு ஆண்களை இலக்காக்க தவறாக பயன்படுத்தப்படுகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 1998 முதல் 2015 வரையில் இதுபோன்ற விவகாராங்களில் தவறாக 27 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

இப்போது நாம் சம உரிமை பற்றி பேசுகிறோம், ஆண்களுக்கும் சட்ட பாதுகாப்பு இதுபோன்ற வழக்குகளில் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையே தேசிய பெண்கள் ஆணையம் தலைவர் ரேகா சர்மா பேசுகையில், “பெண்களுக்காக குரல் கொடுக்க தேசிய பெண்கள் ஆணையம் அமைக்கப்பட்டது, அவர்களுக்கு நீதிக்கிடைக்க வேண்டும் என்பதை உறுதிசெய்யவே செயல்பட்டு வருகிறது. இப்போது சிலர் ஆண்களுக்கும் இதுபோன்ற ஆணையம் வேண்டும் என்றார்கள், அவர்களுக்கு அதற்கான உரிமை உள்ளது. என்னுடைய கருத்து என்னவென்றால் இதுபோன்ற ஆணையம் தேவையில்லை என்பதே,” என்று கூறியுள்ளார். 

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி கடந்த வருடம் பேசுகையில், போலியான புகார்கள் கொடுக்கப்படுகிறது என்று ஆண்களிடம் இருந்து எனக்கு அதிகமான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது, பெண்கள் ஆன்-லைனில் புகார்களை தெரிவிக்க வசதிகள் உள்ளது போன்று ஆண்களுக்கும் ஏற்பாடு செய்துக் கொடுக்க பெண்கள் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளேன்,” என்று கூறியிருந்தார். 

மேலும் செய்திகள்