ககன்யான் திட்டம்: அமெரிக்கா அல்லது ரஷ்ய உதவியை பெற வேண்டும்; முன்னாள் இஸ்ரோ தலைவர்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் வெற்றி பெற அமெரிக்கா அல்லது ரஷ்யாவிடம், இந்தியா உதவி கேட்க வேண்டும் என முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.;
ஐதராபாத்,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என டெல்லியில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்த நிலையில் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் இன்று பேசும்பொழுது, இந்திய விண்வெளி திட்டத்தில் அடுத்த கட்ட உள்ளார்ந்த நடவடிக்கையாக இது உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக இதுபற்றி நாம் கனவு கண்டோம். பிரதமர் நரேந்திர மோடி மிக தைரியமிக்க ஒரு முடிவை எடுத்து உள்ளார். இது தேசத்தின் பெருமையை பற்றிய விசயம். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, திருப்பி கொண்டு வருவதற்காக சொந்த விண்கலத்தினை நாம் வைத்திருப்போம். அதனால் இது ஒரு சிறந்த திட்டம் மற்றும் வரவேற்கத்தக்க விசயம் என கூறியுள்ளார்.
விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் உயிர்காக்கும் சாதனங்களை உருவாக்குவது மற்றும் பிற விசயங்கள் என நமக்கு பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன.
இவை அனைத்தும் புதிய முன்னேற்றத்திற்கான விசயம். இவை மிக சவாலான பணியாகவும் இருக்கும். 2022ம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கு ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற சில நட்பு நாடுகளிடம் நாம் உதவி கேட்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.