மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி பரிசீலனை

கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. #Karunanidhi #DMK

Update: 2018-08-11 14:06 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.  

கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். 

கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அதேபோல், கருணாநிதிக்கு பாரதரத்னா விருத்தி வழங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். 

இந்தநிலையில், மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தநிலையில்,  கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி மத்திய அரசு முடிவு செய்யும் என்று இல.கணேசன் எம்.பி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்