பீகார்: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம்–பா.ஜனதா மோதல்

பீகாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம்–பா.ஜனதா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. #BJP

Update: 2018-06-04 15:58 GMT
பாட்னா, 

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்–பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், நேற்று ஐக்கிய ஜனதாதளத்தின் மேலிட குழு கூட்டம் நடைபெற்றது. அதில், ‘பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்தான் பெரிய கட்சி, அதனால், மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் அதிக  தொகுதிகளைப் பெற வேண்டும்’ என்று முடிவு செய்யப்பட்டது. இத்தகவலை ஐக்கிய ஜனதாதளம் செய்தித்தொடர்பாளர் அஜய் அலோக் உறுதிப்படுத்தினார்.

ஆனால், பா.ஜனதாவும் பீகாரில் அதிக தொகுதிகளை பெறும் விருப்பத்தை சூசகமாக தெரிவித்துள்ளது. ‘‘பீகாருக்கு நிதிஷ் குமார் கூட்டணி தலைவராக இருந்தாலும், பிரதமர் மோடி தலைமையில்தான் மக்களவை தேர்தலை சந்திக்க போகிறோம்’’ என்று மத்திய மந்திரி ராம் கிருபால் யாதவ், மாநில பா.ஜனதா துணைத்தலைவர் மிதிலேஷ் திவாரி ஆகியோர் கூறியுள்ளனர். இதன்மூலம், பா.ஜனதாவுக்கே அதிக தொகுதிகள் வேண்டும் என்று சூசகமாக தெரிவித்துள்ளனர்.

இரு கட்சிகள் இடையேயும் வெளியாகியுள்ள கருத்துக்கள், கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது. பாரதீய ஜனதா கட்சி அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பின்னடைவை சந்தித்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பாஜகவுக்கு மறைமுகமாக நெருக்கடி அளிப்பது அக்கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், எங்கள் கூட்டணிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று பாஜக விளக்கம் அளித்துள்ளது. 

மேலும் செய்திகள்