மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் ஆல் இந்தியா ரேடியாவிற்கு ரூ. 10 கோடி வருமானம்
மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் ஆல் இந்தியா ரேடியா ரூ. 10 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி,மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.
இந்த வானொலி உரையின்போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மை குறித்து பேசி வருகிறார்.பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சியால் அகில இந்திய ரேடியோவிற்கு ரூ.10 கோடி வருமானம் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் பாராளுமன்றத்தில் இன்று கூறியதாவது, பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி 18 மாநில மொழிகளில் ஒலிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கடந்த 2015-16-ம் ஆண்டில் ரூ.4 கோடியே 78 லட்சம் ரூபாயும், 2016-17-ம் ஆண்டில் 5 கோடியே 19 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.