கார் விபத்தில் மாடல் அழகி பலியான விவகாரம்: மேற்கு வங்காள நடிகர் விக்ரம் சட்டர்ஜி கைது

கார் விபத்தில் மாடல் அழகி பலியான விவகாரத்தில் மேற்கு வங்காள நடிகர் விக்ரம் சட்டர்ஜியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-07-07 23:30 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் பிரபல மாடல் அழகியாகவும், தொலைக் காட்சி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தவர் சோனிகா சவுகான். இவர், தனது நண்பரும், பிரபல வங்காள மொழி நடிகருமான விக்ரம் சட்டர்ஜியுடன் கொல்கத்தாவில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கடந்த ஏப்ரல் 29-ந் தேதி அதிகாலையில் காரில் வீடு திரும்பினார். காரை விக்ரம் சட்டர்ஜி ஓட்டிச்சென்றார்.

இந்த கார் கொல்கத்தா அருகே சாலையில் சென்றபோது நடை பாதையில் வேகமாக மோதியது. இதில் கார் முற்றிலும் உருக்குலைந்ததுடன், அதில் இருந்த சோனிகாவும், விக்ரம் சட்டர்ஜியும் பலத்த காயமடைந்தனர்.

இருவரும் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சோனிகா சவுகான் பரிதாபமாக உயிரிழந்தார். விக்ரம் சட்டர்ஜி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கார் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டது. மேலும் காரை ஓட்டிய விக்ரம் சட்டர்ஜி மது அருந்தியிருந்ததாகவும் தெரிகிறது. எனவே கார் ஓட்டும்போது அலட்சியமாக இருந்ததாகவும், அதிவேகமாக ஓட்டியதாகவும் விக்ரம் சட்டர்ஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு சோனிகா சவுகான் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இதனால் கொலைக்கு நிகரான குற்றச்செயலில் ஈடுபட்டதாக விக்ரம் சட்டர்ஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்த நடிகர் விக்ரம் சட்டர்ஜியை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

நடிகர் விக்ரம் சட்டர்ஜி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்