சட்டசபைக்கு வந்த பெண்ணை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீது வழக்கு

அமானதுல்லா கான், சோம்நாத் பார்தி, ஜர்னைல் சிங் ஆகிய 3 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-07-06 23:28 GMT
புதுடெல்லி, 

டெல்லி சட்டசபை கூட்டத்தை பார்வையிடுவதற்காக கடந்த 28-ந்தேதி பெண் ஒருவர் வந்தார். இதற்காக அனுமதிச்சீட்டு வாங்க முயன்ற போது அவருக்கு கிடைக்கவில்லை. எனவே சட்டசபைக்கு வெளியே அவர் நின்றிருந்தார்.

அப்போது அங்கே தகராறில் ஈடுபட்ட சிலர், அந்த பெண்ணை பிடித்து தள்ளினர். பின்னர் அவரை அங்குள்ள அறைக்கு அழைத்துச்சென்றும் தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலரும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண் டெல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அமானதுல்லா கான், சோம்நாத் பார்தி, ஜர்னைல் சிங் ஆகிய 3 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது டெல்லி அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது மத்திய அரசின் பழிவாங்கும் செயல் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் கூறுகையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எங்கள் கட்சியை சேர்ந்த வெறும் 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு இருப்பது ஆச்சரியமாக உள்ளது’ என்று கிண்டலாக தெரிவித்தார். 

மேலும் செய்திகள்