சிரியாவில் நடந்த தாக்குதல்களில் கேரளாவை சேர்ந்த 5 பேர் பலி?

கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் சிரியா சென்று, அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து சண்டையிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Update: 2017-07-02 22:15 GMT

கோழிக்கோடு,

அந்த வகையில் கேரளாவின் மலபார் பகுதியை சேர்ந்த 5 பேர் சிரியாவில் நடந்த தாக்குதல்களில் பலியாகி உள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன என்று உளவுப்பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

‘‘இந்த தகவல்கள் அதிகாரபூர்வமானவை என கூற முடியாது. அதே நேரத்தில் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தகவல்கள் வந்திருப்பதால் உண்மையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு’’ என்று அவர் தெரிவித்தார்.

பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு சிபி என்பவர் முதலில் பஹ்ரைனில் வேலை பார்த்ததாகவும், பின்னர் சிரியா சென்று ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து சண்டையிட்டபோது, ஒரு தாக்குதலில் பலியாகி விட்டதாகவும் அவர்களது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதேபோன்று அலெப்போவில் நடந்த தாக்குதலில் முஹாதிஸ் என்பவர் உயிரிழந்து விட்டதாக பஹ்ரைனில் உள்ள அவரது சகோதரருக்கு தெரியவந்து, அவர் அதை மலப்புரம், வாணியம்பலத்தில் உள்ள குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.

பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த அபுதாஹிர் என்பவர், அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இப்படி சிரியாவில் மேலும் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதே போன்று காசர்கோடு, கோழிக்கோடு பகுதிகளை சேர்ந்த 4 பேர் ஆப்கானிஸ்தானில், நங்கர்ஹார் மாகாணத்தில் பலியானதாக வந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்