'ஐபோன்' வாங்கி கொடுக்காததால் வீட்டை விட்டு ஓடிய 2 மாணவர்கள்

பெங்களூருவில், ஐபோன் வாங்கி கொடுக்காததால் வீட்டை விட்டு ஓடிய 2 மாணவர்கள் கோவாவில் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-09-11 22:00 GMT

பெங்களூரு:

பெங்களூருவில், ஐபோன் வாங்கி கொடுக்காததால் வீட்டை விட்டு ஓடிய 2 மாணவர்கள் கோவாவில் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஐபோன் கேட்டு அடம்

பெங்களூரு நாக ஷெட்டிஹள்ளியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 15 வயதில் மகன் உள்ளான். அந்த சிறுவன் பூபசந்திராவில் உள்ள மதரசா பள்ளியில் படித்து வருகிறான். அந்த சிறுவனுடன் ஹெப்பாலை சேர்ந்த 15 வயது சிறுவனும் படித்து வருகிறான். இந்த நிலையில், பள்ளிக்கு சென்ற 2 மாணவர்களும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சஞ்சய்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

2 பேரின் பெற்றோரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது தங்களது மகன்கள் செல்போன் பயன்படுத்துவதாகவும், ஐபோன் வாங்கி கொடுக்கும்படி கடந்த சில நாட்களாக அடம் பிடித்து வந்ததாகவும், அவ்வாறு வாங்கி தராவிட்டால் மும்பைக்கு சென்று வேலை பார்த்து சொந்தமாகவே ஐபோன் வாங்கி கொள்வதாகவும் 2 மாணவர்களும் கூறியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

கோவாவில் மாணவர்கள் மீட்பு

இதனால் ஐபோன் வாங்கி கொடுக்காததால் 2 பேரும் மும்பைக்கு சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதினர். அதே நேரத்தில் மாணவர்கள் காணாமல் போனது குறித்து அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்ததுடன், ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தினர்கள். அப்போது பெங்களூருவில் இருந்து கோவாவுக்கு செல்லும் ரெயிலில் 2 மாணவர்களும் ஏறிச் செல்லும் காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. இதனால் மாணவர்கள் மும்பை செல்லவில்லை, கோவாவுக்கு சென்றிருப்பதை போலீசார் உறுதி செய்தார்கள்.

உடனே கோவா சென்ற போலீசார், அவர்களது செல்போன் சிக்னல் மூலமாக 2 பேர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். மேலும் 2 மாணவர்களையும் மீட்டு பெங்களூருவுக்கு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஐபோன் வாங்கி கொடுக்காத காரணத்தால் மாணவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போனது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்