கொரோனா காலத்தில் பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகள் தலைமறைவு...! - உ.பி.யில் அதிர்ச்சி

கொரோனா காலத்தில் சிறையில் இருந்து பல கைதிகள் பரோலில் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2022-07-12 08:27 GMT

லக்னோ,

இந்தியாவில் கொரோனா அலை உச்சத்தில் இருந்தபோது நூற்றுக்கணக்கான கைதிகள் சிறையில் இருந்து பரோலில் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையில் கொரோனா பரவல் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்படலாம் என்பதால் பல மாநிலங்களில் கைதிகள் பரோலில் விடுதலை செய்யப்பட்டனர்.

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள சிறையில் இருந்து கடந்த ஆண்டு 39 கைதிகள் பரோலில் விடுதலை செய்யப்பட்டனர்.

பரோலில் விடுதலையான கைதிகள் அனைவரும் மே 26-ம் தேதிக்குள் மீண்டும் சிறைக்கு திரும்பவேண்டுமென உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஷாஜகான்பூர் சிறையில் இருந்து கொரோனா பரவலின் போது பரோலில் சென்ற 39 கைதிகளில் இதுவரை 23 பேர் மட்டுமே சிறைக்கு திரும்பியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எஞ்சியுள்ள 16 கைதிகள் பரோல் காலம் முடிவடைந்த போதும் சிறைக்கு திரும்பவில்லை என்றும் அவர்கள் அனைவரும் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்தும் தகவல் தெரியவில்லை என சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், பரோலில் சென்று மாயமான கைதிகளின் குடும்பத்தினரிடம் விசாரிக்கப்பட்டபோதும் கைதிகள் எங்கு உள்ளனர் என தெரியவில்லை எனவும், தலைமறைவான 16 கைதிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்