பிரவீன் நெட்டார் கொலையில் கோர்ட்டில் 1,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பிரவீன் நெட்டார் கொலையில் கோர்ட்டில் 1,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2023-01-21 21:14 GMT

பெங்களூரு:-

பிரவீன் நெட்டார் கொலை

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார் (வயது 30). பா.ஜனதா பிரமுகரான இவர், கோழி இறைச்சிக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 26-ந் தேதி பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அரசின் உத்தரவின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரவீன் நெட்டார் கொலையில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களில் முகமது ஷெரீப், மசூத் ஆகிய 2 பேர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

1,500 பக்க குற்றப்பத்திரிகை

அந்த குற்றப்பத்திரிகை 1,500 பக்கங்களை கொண்டதாக உள்ளது. ஒட்டு மொத்தமாக 20 குற்றவாளிகள் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 6 பேர் தலைமறைவாக இருந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர குற்றப்பத்திரிகையில் பிரவீன் நெட்டார் கொலை தொடர்பாக 240 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிரவீன் நெட்டாரை கொலை செய்ய நடந்த சதி திட்டம் பற்றியும் விரிவாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் பிரவீன் நெட்டார் மட்டுமின்றி மற்றொரு நபரையும், கைதான கும்பல் கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்ததாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2047-ம் ஆண்டு இந்தியாவில் இஸ்லாமிக் ஆட்சி நிர்வாகத்தை அமைப்பதற்காக தனிக்குழு செயல்பட்டு வருவதாக கைதான நபர்கள் தெரிவித்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்