மராட்டியத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மந்திரிகளில் 15 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டவர்கள் - அதிர்ச்சி தகவல்!

புதிதாக பொறுப்பேற்ற 18 புதிய மந்திரிகளில் தலா ஒன்பது பேர் ஷிண்டேவின் சிவசேனா குழுவையும் மீதி 9 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Update: 2022-08-12 09:45 GMT

மும்பை,

மராட்டியத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசில், முதல்-மந்திரி உட்பட 20 மந்திரிகள் உள்ளனர்.

அங்கு மந்திரிசபை விரிவாக்கம் இந்த வாரம் நடந்தது. மந்திரிகள் குழுவில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்ற 18 புதிய மந்திரிகளில் தலா ஒன்பது பேர் ஷிண்டேவின் சிவசேனா குழுவையும் மீதி 9 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த நிலையில், மராட்டியத்தில் புதிதாக பதவியேற்றுள்ள (முதல் மந்திரி, துணை முதல் மந்திரி உட்பட) 20 மந்திரிகளில், 15 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர் என ஏடிஆர் அறிக்கை கூறுகிறது. மேலும், அனைத்து மந்திரிகளும் பல கோடி சொத்து மதிப்புள்ள கோடீஸ்வரர்கள், அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.47.45 கோடி என அந்த அறிக்கை கூறுகிறது.

மந்திரிகளில் 75 சதவீதம் பேர் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை கொண்டுள்ளனர் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து மந்திரிகளின் சுய பிரமாணப் பத்திரங்களை அவர்கள் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்படி, 15 (75 சதவீதம்) மந்திரிகள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளையும், 13 (65 சதவீதம்) பேர் தங்களுக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகளையும் கொண்டுள்ளதாக தேர்தலின் போது சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் அறிவித்துள்ளனர்.

மந்திரிகள் 8 பேர் (40 சதவீதம்) தங்களது கல்வித் தகுதி 10 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்