உத்தர பிரதேசத்தில் வேன் மீது பஸ் மோதி விபத்து: 15 பேர் பலி

தேசிய நெடுஞ்சாலையில் வேனை முந்திச் செல்ல முயன்றபோது பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Update: 2024-09-06 18:24 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸில் இருந்து ஆக்ரா நோக்கி தேசியநெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ், வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 15 பேர் பலியானார்கள். 16 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் கூறும்போது, "ஆக்ரா-அலிகார் தேசிய நெடுஞ்சாலையில் வேனை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது" என்றார்.

இதனிடையே ஹத்ராஸில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்