114 'நம்ம கிளினிக்'குகள் நாளை தொடக்கம்

கர்நாடகத்தில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

Update: 2022-12-12 21:09 GMT

பெங்களூரு:-

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஜிகா வைரஸ்

கர்நாடகத்தில் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அந்த குழந்தைக்கு தொடா்ந்து 15 நாட்கள் காய்ச்சல் இருந்துள்ளது. வாந்தி-பேதியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் சந்தேகம் அடைந்து, அந்த குழந்தையின் ரத்த மாதிரியை சேகரித்து புனேவில் உள்ள வைரலாஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில் அந்த சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானது தெரியவந்தது.

அந்த குழந்தைக்கு அந்த வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. அந்த சிறுமி எங்கெங்கு சென்று வந்தார், யார்-யார் தொடர்பில் இருந்தனர் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஜிகா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மூலம் பரவியதா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தையின் பெற்றோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவுக்கு அனுப்பி வைக்கப்படடுள்ளது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்த வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. ராய்ச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

நம்ம கிளினிக்குகள்

சுகாதாரத்துறை சார்பில் நகரங்களில் 438 நம்ம கிளினிக் மருத்துவ மையங்களை திறக்க ஏற்கனவே முடிவு செய்தோம். அதன்படி முதல்கட்டமாக 114 நம்ம கிளினிக்குகளை 14-ந் தேதி (நாளை) தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து நம்ம கிளினிக்குகளும் திறக்கப்பட்டுவிடும்.

பெங்களூரு மாநகராட்சியில் 243 கிளினிக்குகளை அமைக்கிறோம். நகரங்களில் வசிக்கும் ஏழை மக்கள், தொழிலாளர்களுக்கு இந்த கிளினிக்குகள் பயனுள்ளதாக இருக்கும். இந்த கிளினிக்குகள் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். இந்த திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 300 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சை?

இந்த கிளினிக்குகளில் 12 வகையான மருத்துவ சேவைகள் கிடைக்கும். அதில் ஒரு டாக்டர், நர்சுகள், ஆய்வக டெக்னிஷியன், டி பிரிவு ஊழியர் ஒருவர் பணியாற்றுவார்கள். கர்ப்பிணி பெண்கள், பிரசவத்திற்கு பிறகு மருத்துவ சேவை, பொது தடுப்பூசி சேவைகள், குடும்ப கட்டுப்பாட்டு திட்ட சிகிச்சை, தொற்று நோய் சிகிச்சை, சிறிய நோய்களுக்கான சிகிச்சை, சர்க்கரை, ரத்த அழுத்தம், நீண்ட கால நோய்கள், வாய், கர்ப்ப பை புற்றுநோய், வாய் சுகாதாரம், கண் பரிசோதனை, மனநல சுகாதார சேவைகள் வழங்கப்படும். அங்கு மருந்து-மாத்திரைகள் முற்றிலும் இலவசமாமக வழங்கப்படும். 14 வகையான ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்