காங்கிரஸ் ஆட்சியில் 85 சதவீத கமிஷன் ஊழல்

அனைத்து திட்டங்களிலும் 15 சதவீத பணமே மக்களுக்கு சென்றதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் 85 சதவீத கமிஷன் பெற்று ஊழல் நடந்ததாக கோலார் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு கூறினார்.

Update: 2023-04-30 21:25 GMT

பெங்களூரு, மே.1-

2-வது நாளாக மோடி பிரசாரம்

224 சட்டசபை தொகுதிகளை கொண்ட கர்நாடகத்தில் வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று முன்தினம் முதல் கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். நேற்று முன்தினம் பீதர், பெலகாவியில் நடந்த பொதுக்கூட்டங்களிலும், பெங்களூருவில் நடந்த பிரமாண்ட ஊர்வலத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் இரவு பெங்களூரு கவர்னர் மாளிகையிலேயே தங்கி அவர் ஓய்வெடுத்தார்.

இந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். கோலார், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா, ஹாசன் மாவட்டம் பேளூருவில் பா.ஜனதா பொதுக்கூட்டங்களிலும், மைசூருவில் ஊர்வலத்திலும் அவர் பங்கேற்றார். கோலார் மாவட்டத்தில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

85 சதவீத கமிஷன்

காங்கிரஸ் ஊழலுக்கு எதிராக போராடுவதில்லை. ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து திட்டங்களிலும் ஊழல் இருந்தது. ஊழலில் ஊறிப்போன காங்கிரசால் ஊழலை ஒழிக்க சாத்தியமில்லை. 2014-ம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடியை பா.ஜனதா வசூல் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு திட்டத்திலும் 85 சதவீதம் ஊழல் செய்திருந்தார்கள்.

விவசாயிகளுக்கான திட்டத்திலும் 85 சதவீத கமிஷன் வாங்கி ஊழலில் ஈடுபட்டனர். மத்திய அரசு 1 ரூபாய் அனுப்பினால், அதில் விவசாயிகளுக்கு 15 பைசா தான் கிடைத்தது. 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு நாட்டின் நிலைமை வேறு மாதிரி மாறியது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகள், நாட்டு மக்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக ரூ.29 லட்சம் கோடி நேரடியாக சென்றுள்ளது.

தனிப்பெரும்பான்மை பலம்

இது காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால், விவசாயிகள், மக்களுக்கு வெறும் 15 சதவீதம் மட்டுமே சென்றிருக்கும். ஊழலில் ஈடுபட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் பலர் சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள். நாங்கள் ஊழலுக்கு எதிராக போராடுகிறோம். இதன் காரணமாக நொந்து போய் இருக்கும் காங்கிரசார், அதற்காக தான் என்னை எச்சரிக்கிறார்கள்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு இவ்வளவு பேர் வந்திருப்பதை பார்த்து காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்கள் தங்களது தூக்கத்தை இழந்துள்ளனர். அந்த 2 கட்சிகளும் கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளனர். அந்த 2 கட்சிகளையும் இந்த தேர்தலில் 'கிளீன்போல்டு' ஆக்க மக்கள் தயாராகி விட்டனர். இந்த முறை தனிப்பெரும்பான்மை பலத்துடன் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

பா.ஜனதாவுக்கு ஆதரவு

கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. சமூக மக்களும், பெண்களும் தான். 10 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 9 கோடி பெண்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு கொடுத்துள்ளோம். 2.5 கோடி வீடுகளுக்கு நேரடியாக மின் இணைப்பு கொடுத்துள்ளோம்.

தற்போது மக்களுக்கு காங்கிரஸ் கட்சி பொய் உத்தரவாதம் அளிக்கிறது. காங்கிரசின் வாக்குறுதிகள் பொய் மூட்டை. இமாசல பிரதேசத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காங்கிரசால் நிறைவேற்ற முடியவில்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். 2004-ம் ஆண்டு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காங்கிரஸ் இதுவரை நிறைவேற்றவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளின் வங்கி கணக்குகே பணம் போடுகிறோம்.

தொங்கு சட்டசபையால் பிரச்சினை

காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியதில்லை. கர்நாடகத்தில் தற்போது மக்கள் அளிக்கும் வாக்குகள் வெறும் எம்.எல்.ஏ., மந்திரி, முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பது மட்டும் இல்லை. அடுத்த 25 ஆண்டுகள் நாடு மற்றும் கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக மக்கள் கொடுக்கும் வாக்குகள் ஆகும். மாநிலத்தில் தொங்கு சட்டசபை வந்தால், என்னவெல்லாம் பிரச்சினை வரும் என்று மக்களுக்கு தெரியும்.

கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை வருவதில் இருந்து நீங்கள் பாதுகாக்க வேண்டும். இரட்டை என்ஜின் அரசால் தான் மாநிலத்தின் வளர்ச்சி சாத்தியமாகும். மத்தியில் பா.ஜனதா அரசு என்ற என்ஜின் இருப்பதால், கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு என்ற என்ஜின் ஆட்சிக்கு வர வேண்டும். பா.ஜனதாவுக்கு நீங்கள் அளிக்கும் ஒரு ஓட்டு மாநிலத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளியுங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கோலார் மாவட்டத்தில் பா.ஜனதாவுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. தற்போது பிரதமர் மோடி கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்