மத்திய அரசு முன்னாள் அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. நடத்திய அதிரடி சோதனையில் ரூ.38 கோடி ரொக்கம் சிக்கியது

வருமானத்துக்கு மீறி சொத்து குவித்த மத்திய அரசு நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இதில் ரூ.38 கோடி ரொக்கம் சிக்கியது.

Update: 2023-05-03 18:06 GMT

புதுடெல்லி, 

வருமானத்துக்கு மீறி சொத்து குவித்த மத்திய அரசு நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இதில் ரூ.38 கோடி ரொக்கம் சிக்கியது.

மத்திய அரசின் ஜல்சக்தி துறையின் கீழ் இயங்கி வரும் அரசு நிறுவனம், 'வாப்கோஸ்' ஆகும். இந்த நிறுவனத்தின் தலைவர்-நிர்வாக இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராஜிந்தர் குமார் குப்தா.

இவரது பதவிக்காலத்தில் (2011 ஏப்ரல் 1 தொடங்கி 2019 மார்ச் 31 வரை), இவரும், மனைவி ரீமா சிங்கால், மகன் கவுரவ் சிங்கால், மருமகள் கோமல் சிங்கால் ஆகியோர் வருமானத்துக்கு மீறி ஊழல் செய்து பல கோடி ரூபாய் சொத்துகளை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.

டெல்லி, குருகிராம், சண்டிகார், சோனிப்பட்டு, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினார்கள்.

இந்த சோதனைகளில் ரூ.38 கோடி பணம் சிக்கி உள்ளதாக சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தர் குமார் குப்தாவின் ஓய்வுக்கு பின்னர் குடும்பத்தினர் டெல்லியில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ராஜிந்தர் குமார் குப்தாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் டெல்லி, குருகிராம், பஞ்ச்குலா, சோனிப்பட், சண்டிகார் ஆகிய இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள், வணிக கட்டிடங்கள், பண்ணை வீடுகள் இருப்பதாக தெரிய வந்திருப்பதாகவும் சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதையடுத்து ராஜிந்தர் குமார் குப்தாவையும், அவரது மகன் கவுரவ் சிங்காலையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்