வால்பாறையில் வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் வினோத செடி உரசியதால் வழிதவறி சென்றதாக தகவல்

வால்பாறையில் விறகு எடுக்க சென்றபோது வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் மீட்கப்பட்டார். வினோத செடி பட்டதால் வழிதவறி சென்றதாக தெரியவந்து உள்ளது.

Update: 2022-04-01 17:41 GMT
வால்பாறை

வால்பாறையில் விறகு எடுக்க சென்றபோது வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் மீட்கப்பட்டார். வினோத செடி பட்டதால் வழிதவறி சென்றதாக தெரியவந்து உள்ளது. 

வனப்பகுதிக்குள் சென்றார்

அடர்ந்து பரந்து இருக்கும் வனப்பகுதிக்குள் நாம் தெரிந்து கொள்ளாத விஷயங்கள் பல உள்ளன. ஆள் விழுங்கும் மரம், மதி மயக்கும் செடி, திசை திருப்பும் செடி, கையை வைத்தால் இழுத்துக் கொள்ளும் பூக்கள் என்று பலவகையான செடிகளும், மரங்களும் உள்ளன. இதுபோன்ற செடி, மரங்களில் சிக்கி உயிரையும் மாய்த்தது உண்டு. 

அதுபோன்றுதான் ஒரு வினோத செடியிடம் சிக்கி மதி மயங்கி, திசை தெரியாமல் அலைந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டு உள்ளார். 

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சந்திரா என்கிற வேலுத்தாய் (வயது 54). தேயிலை பறிக்கும் வேலை செய்து வரும் இவர் விறகு எடுக்க அக்காமலை எஸ்டேட் அருகே உள்ள ஊசிமலை வனப்பகுதிக்குள் சென்றார். 

பொதுமக்கள் மீட்டனர்

நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. இதனால் வனத்துறையினர் அவரை தேடி பார்த்தனர். ஆனால் இருள் சூழ்ந்துவிட்டதால், தேடும் பணி கைவிடப்பட்டது. தொடர்ந்து 2-வது நாளாக அவரை தேடும் பணி நடந்தது.

 டிரோன் உதவியுடனும் தேடப்பட்டது. ஆனால் அவர் கிடைக்கவில்லை. 
இந்த நிலையில் அக்காமலை பகுதியில் இருந்து 5 கி.மீ. தூரம் கொண்ட கீழ்ப்பகுதியான சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி பகுதியில் தேயிலை பறிக்கும் உடையுடன் நின்றிருந்த வேலுத்தாயை அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டனர். 

அவரிடம் விசாரித்தபோது விறகு எடுக்க சென்றபோது வழிதவறி வந்ததாக கூறினார். இதையடுத்து அவரை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். 

இது குறித்து சின்னக்கல்லார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- 

வினோத செடி திசை திருப்பியது

அக்காமலை வனப்பகுதியில் ஏராளமான வினோதமான செடிகள் உள்ளன. இதில் திசைதிருப்பான் என்ற செடி உள்ளது. அது நம் மீது உரசினால் நமக்கு சுயநினைவு இருக்காது. 

இதனால் நாம் எங்கு செல்கிறோம் என்றே நமக்கு தெரியாது. அதன்படிதான் வனப்பகுதிக்குள் சென்ற வேலுத்தாய் மீது இந்த செடி உரசி உள்ளது. இதனால்தான் அவர் சுயநினைவை இழந்து திசை தெரியாமல் பல கி.மீ. தூரம் சுற்றி உள்ளார். 

பின்னர் சுயநினைவுக்கு வந்ததும், இருள் சூழ்ந்துவிட்டதை அறிந்த அவர் அங்குள்ள ஒரு பாறை இடுக்கில் இரவு முழுவதும் இருந்துள்ளார். பின்னர் காலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து உள்ளார். 

தவிர்க்க வேண்டும்

இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் அதிகம் உண்டு. சுயநினைவை இழந்துவிடுபவர்கள் அதிடம் சிக்கினால் அதோ கதிதான். நல்லவேளையாக வேலுத்தாய் வனவிலங்கிடம் சிக்க வில்லை. 

எனவே தனியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் ெசல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்