வாகனங்களில் பொருத்தப்பட்ட பம்பர் அகற்றம்

வாகனங்களில் பொருத்தப்பட்ட பம்பர் அகற்றம்

Update: 2021-10-04 16:42 GMT
பொள்ளாச்சி


போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த பம்பர்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அகற்றினர்.

வாகன சோதனை

கார் மற்றும் சரக்கு வாகனங்களின் முன்பகுதிகளில் பம்பர் பொருத்தப்படுகின்றன. இதனால் விபத்தில் ஏற்படும் போது எதிரே வரும் வாகனங்களுக்கு சேதம் அதிகமாக ஏற்படுகிறது. மேலும் பம்பர் பொருத்தப்பட்ட கார்கள் விபத்தில் சிக்கும் போது, அதிர்வுகளை பம்பர் தாங்கி கொள்கிறது. இதனால் சென்சார் செயல்படாததால் ஏர்பேக் வெளியேறாததால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக வாகனங்களின் முன்பகுதிகளில் பம்பர் பொருத்த அரசு தடை விதித்து உள்ளது.


ஆனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களில் பம்பர் பொருத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையத்தில் இருந்து மீன்கரை செல்லும் ரோட்டில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெயந்தி, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி அதில் பொருத்தப்பட்டு இருந்த பம்பர்களை அகற்றினர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

அபராதம்

அம்பராம்பாளையத்தில் இருந்து மீன்கரை செல்லும் ரோட்டில் சிறப்பு வாகன ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது சொந்த பயன்பாடு மற்றும் சரக்கு வாகனங்களில் அனுமதிக்கு புறம்பாக பொருத்தப்பட்டு இருந்த பம்பர்கள் அகற்றப்பட்டன. மேலும் அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கேரளாவில் இருந்து சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தும் வாகனங்களை வாடகைக்கு இயக்கியது கண்டறியப்பட்டு 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதை தொடர்ந்து உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட கேரள மாநில சரக்கு வாகனங்களுக்கு வரி தொகை நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து முக்கிய சாலைகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும். அப்போது விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்