குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலை

Update: 2021-10-03 15:50 GMT
திருப்பூர்
திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள பல சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச்செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
சாலையில் குளம்?
திருப்பூரில் உள்ள பல சாலைகள் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மாநகரில் உள்ள சில சாலைகளின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. மாநகரின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே குழிகள் உள்ள நிலையில் நகரின் உள்ளே இருக்கும் சாலைகள் சரியான முறையில் சீரமைக்கப்படாமல் உள்ளது. 
இதன் காரணமாக குமார் நகர் கிழக்கு 60 அடி சாலையில் மிகப்பெரும் பள்ளம் காணப்படுகிறது. தற்போது இந்த சாலையில் மழை வெள்ளம் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனத்தை ஓட்டிச்செல்வதற்கு வாகன ஓட்டிகள் திண்டாடி வருகின்றனர். கடந்த பல மாதங்களாகவே இந்த சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதாக இப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தடுமாற்றம்
இதேபோல், ஓம்சக்தி கோவில் ரோடும் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இங்கிருந்து எஸ்.வி.காலனி வரை சாலையில் பல இடங்களில் பெரிய குழிகள் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பல்லாங்குழி சாலையில் தட்டுத்தடுமாறியபடி வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இப்பகுதியில் அதிக அளவிலான பனியன் நிறுவனங்கள் மற்றும் பனியன்சார்ந்த கடைகள் உள்ளன. 
இதனால் இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. ஆனால் சாலை மோசமாக இருப்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன், வாகனங்களும் நாசமடைகின்றன. மேலும் மோசமான சாலைகளால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, மாநகர பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?. என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்