கோவில்பட்டியில் ஓடும் பஸ்சில் பெண் என்ஜினீயரிடம் பணப்பையை அபேஸ் 3 பெண்கள் கைது

கோவில்பட்டியில் ஓடும் பஸ்சில் பெண் என்ஜினீயரிடம் பணப்பையை அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-10-03 15:06 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ஓடும் பஸ்சில் பெண் என்ஜினீயரிடம் பணப்பையை அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் கைது ெசய்தனர்.
பெண் என்ஜினீயர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 33). இவருடைய மனைவி வெங்கட பிரியங்கா (30). கணவன், மனைவி இருவரும் என்ஜினீயர்கள். இவர்கள் சென்னை ஐ.டி. கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டிற்கு வந்த வெங்கட பிரியங்கா நேற்று முன்தினம் மாலையில் கோவில்பட்டியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மினி பஸ்சில் மெயின் ரோடு சந்திப்பில் வந்து இறங்கினார்.
பணப்பை அபேஸ்
பஸ்சிலிருந்து வெங்கட பிரியங்கா இறங்கும்போது, அவர் கொண்டு வந்த பையை பக்கத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் எடுத்துக் கொடுத்துள்ளார். பையை பெற்றுக்கொண்ட வெங்கட பிரியங்கா பக்கத்திலுள்ள கடைக்கு சென்று பொருட்களை வாங்கிவிட்டு, பையை பார்த்தபோது அதில் இருந்த பணப்பை திருடு போனது தெரியவந்தது. அதில் ரூ.520 இருந்ததாக கூறப்படுகிறது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பஸ் நிலையத்திற்கு வந்து தன்னுடன் பயணம் செய்த பெண்ணை தேடினார். அங்கு அவர் 2 பெண்களுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்து பொதுமக்கள் உதவியுடன் அவர்களை பிடித்து கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சப்-இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் ஆகியோர் அந்த பெண்களிடம் விசாரித்தனர். அப்போது, அவர்கள் வெங்கட பிரியங்கா கையில் வைத்திருந்த பணப்பையை அபேஸ் செய்ததை ஒத்துக் கொண்டனர். அவர்களிடம் இருந்த  பணப்பையை போலீசார் மீட்டனர்.
3 பெண்கள் கைது
விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பெரியஊர் தேரி கிராமத்தை சேர்ந்த தவமணி மனைவி வசந்தி (50), சங்கர்தாஸ் மனைவி பாண்டியம்மாள் (30), பாலசண்முகம் மனைவி செல்வி (38) என தெரிய வந்தது.
இது தொடர்பாக கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பெண்களையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்