பழையகரம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் கரைகளை பலப்படுத்த வேண்டும்

பழையகரம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-10-01 17:20 GMT
திருவெண்காடு:
பழையகரம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
விவசாயம் பாதிக்கப்படும் 
பூம்புகார் அருகே பழையகரம் கிராமத்தின் நடுவே காவிரி ஆறு செல்கிறது. இந்த இடத்தின் அருகே தான் காவிரி கடலோடு கலக்கும் இடம் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி கடல் நீர் காவிரி ஆற்றின் வழியாக உட்புகுந்து, பழையகரம், ஏ ராம் பாளையம், சாயாவனம் ஆகிய கிராமங்களை கடந்து மேலையூர் வரை சென்று விடுகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி மேற்கண்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. 
மேலும் குடிநீரும் உவர் தன்மை கொண்டதாக மாறி போனது. இதனால்  25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இந்தநிலையில்  கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய எம்.எல்.ஏ. பவுன்ராஜ் முயற்சியால் ரூ. 7.5 கோடி மதிப்பீட்டில் பழையகரம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தடுப்பணை பணி முடிவடைந்தது. 
கரைகள் உடையும் அபாயம் 
தற்போது அந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால் தடுப்பணையை ஒட்டியுள்ள கரைகளை பலப்படுத்தவில்லை. இதனால் அதிக மழை பெய்து வெள்ளம் வந்தால் தடுப்பணை அருகே உள்ள கரைகள் உடையும் அபாயம் உள்ளது. 
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 
எங்களின் 25 ஆண்டுகால தடுப்பணை கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, தண்ணீர் தேங்கி உள்ளதால்  மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் தன்மை நீங்கி நல்ல நீராக மாறி உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைகிறோம். 
கரைகளை பலப்படுத்த வேண்டும்
ஆனால் தடுப்பணையில் முழுமையாக தண்ணீர் எப்போதும் தேங்கி இருக்க, அதன் கரைகள் பலமாக இருப்பது அவசியம். ஆனால் கரைகள் பலமிழந்து காணப்படுகிறது. எனவே காவிரி ஆற்றின் தடுப்பணையில் 200 மீட்டர் அளவிற்கு இருபக்கமும் கரைகளை பலப்படுத்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

மேலும் செய்திகள்