இணையதளத்தில் தொழில்நெறி, திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் இணையதளம் மூலம் தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒரு வாரம்நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-07 04:09 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசின் ஆணைப்படி ஒவ்வொறு வருடமும் ஜூலை மாதத்தில் 2-வது வாரம் தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக பல்வேறு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

தற்போது கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால் இந்த ஆண்டு நடைபெற உள்ள பயிற்சி இணையதளம் மூலமாக நடத்தப்பட உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு பயிற்சி, மகளிர் கல்லூரிகளில் மாணவிகளுக்கு உயர்கல்வி, போட்டி தேர்வுகள், தனியார்துறை வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பள்ளி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாடு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தொழில் பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த தொழில்முனைவோர்களை கொண்டு சுயதொழில் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

பயன் பெறலாம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ படிக்கும் வட்டத்தால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள், மெய்நிகர் கற்றல் வலைதளம் மற்றும் வேலைநாடுநபர்களுக்காக தற்போது தொடங்கப்பட்டுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு இணையம் ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி இணைதளத்தில் பதிவு செய்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதில் கலந்துகொள்ள 04575-240435 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நிகழ்ச்சி குறித்த விவரங்களை அறிந்து கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்