காஷ்மீரில் வீரமரணம் அடைந்த சேலம் ராணுவ வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த சேலம் ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரில் நேற்று இரவு முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2020-06-07 03:35 GMT
எடப்பாடி, 

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த சேலம் ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரில் நேற்று இரவு முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

வீரமரணம்

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூர் வெத்தலைக்காரன் காடு கிராமத்தை சேர்ந்தவர் பி.மதியழகன் (வயது 40). இவர் இந்திய ராணுவத்தில் அவில்தார் பதவி வகித்து வந்தார். இவர் ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பணியாற்றினார். இந்த நிலையில் பாகிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் மதியழகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் இருந்த ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த மதியழகன் உடல் தனி விமானம் மூலம் நேற்றுமுன்தினம் மாலை டெல்லி கொண்டு வரப்பட்டது. அங்கு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவரது உடல் தனி விமானம் மூலம் நேற்று மாலை 5 மணிக்கு கோவை கொண்டு வரப்பட்டது.

கலெக்டர் அஞ்சலி

அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான எடப்பாடி சித்தூருக்கு நேற்று இரவு 7.30 மணிக்கு ராணுவ அதிகாரிகள் கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு, வீட்டின் வராண்டாவில் வைக்கப்பட்டது. ராணுவ வீரர் மதியழகனின் உடலுக்கு ஒரு மணி நேரம் அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்ந்து அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு உடல் எடுத்து செல்லப்பட்டு, முதலில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் குப்பம்மாள் மாதேஷ், சித்தூர் ஊராட்சி தலைவர் நாகராஜ், அ.தி.மு.க. சார்பில் மாணவர் அணி நிர்வாகிகள் வெங்கடேஷ், செல்லதுரை, கதிரேசன், தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன், பா.ஜனதா சார்பில் ரவி உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

21 குண்டுகள் முழங்க அடக்கம்

இதன் பிறகு மதியழகனின் மனைவி தமிழரசியிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிவாரணத்தொகை ரூ.20 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் ராமன் வழங்கினார். இதைத்தொடர்ந்து மதியழகன் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை ராணுவ அதிகாரிகள் அகற்றி, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

அதன்பின்னர் 21 குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் மதியழகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது தந்தை பெத்தாக்கவுண்டர் இறுதி சடங்குகளை செய்தார். ராணுவ வீரர் மதியழகன் உயிரிழந்ததால், சித்தூர் வெத்தலைக்காரன் காடு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசு உதவ வேண்டும்

கணவரின் வீரமரணம் குறித்து மதியழகனின் மனைவி, தமிழரசி கூறுகையில், எனது கணவர் நாட்டுக்காக தன் உயிரை கொடுத்துள்ளார். இது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இருந்தாலும் எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிறு குழந்தைகளாக இருப்பதால், அவர்களது படிப்புக்கு தமிழக அரசு உதவ வேண்டும். நான் எம்.ஏ. படித்துள்ளேன். எனக்கு ஏதாவது அரசு வேலை வழங்கி எனது குழந்தைகளை பாதுகாத்திட அரசு உதவிட வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்