குளித்தலை அருகே சரக்கு வேன் புளியமரத்தில் மோதி வாலிபர் சாவு மற்றொரு விபத்தில் முதியவர் பலி

குளித்தலை அருகே, சரக்குவேன் புளியமரத்தில் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் முதியவர் பலியானார்.

Update: 2020-06-02 04:17 GMT
குளித்தலை, 

குளித்தலை அருகே, சரக்குவேன் புளியமரத்தில் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் முதியவர் பலியானார்.

சரக்கு வேன் மோதல்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள செம்பாறை கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 22). பொம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சத்தியராஜ் (20). இவர்கள் இருவரும் ஓசூரில் இருந்து சரக்கு வேனில் தக்காளி ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு தோகைமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். குளித்தலை -மணப்பாறை சாலையில், ஆலமரத்துப்பட்டி ஒத்தக்கடை பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் சாலையோரம் இருந்த புளிமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயமடைந்த பிரேம்குமாரை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் லேசான காயமடைந்த சத்தியராஜ், தோகைமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

தோகைமலை அருகேயுள்ள தெலுங்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து (70). கூலித்தொழிலாளியான இவர், நேற்று அப்பகுதியில் உள்ள பஸ்நிறுத்தம் அருகே பால் வாங்கிக்கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் அவருக்கு பின்னால் குளித்தலை அருகேயுள்ள குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (57) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மருதமுத்து மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர்.

அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மருதமுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தங்கராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்