திசையன்விளை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு தடுப்பூசி போட மறுத்த செவிலியர் பணியிடை நீக்கம்

திசையன்விளை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு தடுப்பூசி போட மறுத்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2019-11-14 22:15 GMT
திசையன்விளை, 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கழுநீர்குளத்தை சேர்ந்தவர் குருசாமி(வயது 25). இவருக்கும் மதுரையை சேர்ந்த விஜயசாந்திக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் திசையன்விளை மணலிவிளையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அக்‌ஷயா (3) மற்றும் முத்துகிருத்திகா என்ற 3½ மாத குழந்தை உள்ளனர்.

குழந்தை முத்துகிருத்திகாவுக்கு தடுப்பூசி போடுவதற்காக நேற்று முன்தினம் காலையில் விஜயசாந்தியும், குருசாமியும் திசையன்விளையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு இருந்த பணியாளர்கள் உங்கள் குழந்தைக்கு இங்கு தடுப்பூசி போடமாட்டோம். மணலிவிளையில் உள்ள சத்துணவு கூடத்தில் தடுப்பூசி போடுவார்கள். எனவே அங்கு சென்று குழந்தைக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என அந்த பணியாளர்கள் கூறியுள்ளனர்.

எனது குழந்தைக்கு இங்கு தடுப்பூசி போடுங்கள் என விஜயசாந்தி மன்றாடி கேட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த கிராம சுகாதார செவிலியர் மேரி தங்கம், நீ குழந்தை பெற்ற மதுரையில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள். இங்கு உனது குழந்தைக்கு தடுப்பூசி போட முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதை குருசாமி செல்போனில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியுள்ளது.

இதுதொடர்பாக குருசாமி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டரிடம் புகார் செய்துள்ளார். அவர் எழுத்துபூர்வமாக புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி குருசாமி எழுத்துப்பூர்வமாக செவிலியர் மீது புகார் கொடுத்தார். பின்னர் குருசாமியும், அவரது மனைவியும் வேறொரு பால்வாடிக்கு சென்று குழந்தைக்கு தடுப்பூசி போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை சமாதானபுரத்தில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் மேரிதங்கத்தை பணியிடை நீக்கம் செய்து துணை இயக்குனர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்