நெல்லையப்பர் கோவிலில் ரூ.12¼ லட்சம் உண்டியல் காணிக்கை 22 கிராம் தங்கம், 139 கிராம் வெள்ளியும் இருந்தது

நெல்லையப்பர் கோவில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. அதில் ரூ.12 லட்சத்து 25 ஆயிரத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Update: 2019-11-13 22:30 GMT
நெல்லை, 

நெல்லையப்பர் கோவில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. அதில் ரூ.12 லட்சத்து 25 ஆயிரத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 22 கிராம் தங்கம், 139 கிராம் வெள்ளி, 18 வெளிநாட்டு பணமும் இருந்தது.

உண்டியல் எண்ணிக்கை

நெல்லையப்பர் கோவிலில் 21 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். 3 மாதத்துக்கு ஒரு முறை உண்டியல்கள் எண்ணப்பட்டு, அதில் உள்ள பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.

கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி உண்டியல்கள் எண்ணப்பட்டன. இந்தநிலையில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. காலையில் 21 உண்டியல்களும் கோவில் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன. அவைகள் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கை வெளியே எடுக்கப்பட்டது.

அதிகாரிகள் முன்னிலையில்...

நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன், நெல்லை மேற்கு பிரிவு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கண்ணன், கிழக்கு பிரிவு ஆய்வாளர் ராமலட்சுமி, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் நாராயணன் ஆகியோர் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இந்த பணியில் நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு எண்ணினர். மாலையில் உண்டியல் எண்ணும் பணிகள் நிறைவடைந்தது.

ரூ.12¼ லட்சம் காணிக்கை

உண்டியல்களில் ரூ.12 லட்சத்து 25 ஆயிரத்து 598-ம், 22.290 கிராம் தங்கமும், 139 கிராம் வெள்ளியும் இருந்தது. மேலும் 18 வெளிநாட்டு பணமும் இருந்தது. அவற்றை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்