போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்க நவீன கருவி போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்க பணமில்லா பரிவர்த்தனைக்கான நவீன கருவிகளை 21 போலீஸ் நிலையங்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் வழங்கினார்.

Update: 2019-08-14 22:45 GMT
நாகர்கோவில்,

தமிழகத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தும் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் இருந்து உடனடி அபராதம் வசூலிக்கப்படுகிறது.

விதிமீறல் செய்வோரிடம் இருந்து பணமாக வசூலிக்கும் முறையை மாற்றவும், பணமில்லா பரிவர்த்தனை முறையை அமலுக்கு கொண்டு வரவும் தமிழக காவல்துறையில் “இ- செலான்“ என்ற நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் போக்குவரத்து விதிமீறல் குற்றத்துக்கான அபராத தொகை ஏ.டி.எம். டெபிட் கார்டுகள், கிரடிட் கார்டுகள் வாயிலாக பெறப்படும். பணமில்லா பரிவர்த்தனைக்கான நவீன கருவி சென்னை மாநகரில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

இதையடுத்து மாவட்டம் வாரியாக இந்த கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட காவல்துறைக்கு முதல் கட்டமாக 21 இ-செலான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவிகளை போலீசாருக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் பிரிவுகளுக்கும் இ-செலான் கருவிகளை வழங்கினார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

பணமில்லா பரிவர்த்தனை

குமரி மாவட்டத்தில் 21 போலீஸ் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவுகளுக்கு “இ-செலான்“ என்ற நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற போலீஸ் நிலையங்களுக்கு அடுத்தகட்டமாக இந்த இ-செலான் கருவிகள் வழங்கப்படும்.

இனிமேல் போலீசார் வாகன சோதனை நடத்தும்போது இந்த கருவிகள் மூலம் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கு உடனடி அபராதம் வசூலிக்கப்படும். இதன் நோக்கம் பணமில்லாத பரிவர்த்தனை என்பதுதான். குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்கான அபராதத் தொகை மட்டும் இந்த கருவி மூலம் செலுத்த முடியாது. அதை கோர்ட்டில் தான் செலுத்த வேண்டும். டெபிட், கிரடிட் கார்டு இல்லாதவர்களுக்கு குறிப்பிட்ட குற்றத்துக்கான தொகைக்கு பில் வழங்கப்படும். அந்த பில்லுடன் ஸ்டேட் வங்கிகள் மூலம் தமிழ்நாடு காவல்துறைக்கு உரிய பொதுகணக்கு எண்ணில் செலுத்த வேண்டும்.

கேமரா

அவ்வாறு பணம் செலுத்தாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கவோ, வாகனங்கள் தொடர்பாகவோ வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செல்லும்போது, பணம் செலுத்தாமல் இருப்பது தெரிய வரும். முதல்முறை நடந்த போக்குவரத்து விதிமீறல் குற்றத்துக்கு பணம் செலுத்தாமல் 2-வது முறை போலீசாரிடம் சிக்கினால் கட்டணம் கூடுதலாகும். 2-வது முறையும் பணம் செலுத்தாமல் 3-வது முறை சிக்கினால் சம்பந்தப்பட்ட நபரின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். இந்த கருவி மூலம் பணமில்லா பரிவர்த்தனை நடைபெறும்போது போலீசார் பணம் வாங்கினார்கள் என்ற குற்றச்சாட்டும் ஏற்படாது.

மேலும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள நவீன கருவியில் கேமராவும் உள்ளது. அதில் போக்குவரத்து விதிமீறல் செய்த நபர்கள் மற்றும் வாகனங்களையும் படம் பிடித்துக் கொள்ளும் வசதி உள்ளது. போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள கருவி சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன சோதனையின் போது நிறுத்தாமல் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை இந்த கருவி மூலம் படம் பிடித்தால் சம்பந்தப்பட்ட வாகனம் யாருடையது? அவருடைய முகவரி? போன்ற விவரங்கள் எல்லாம் தெரிய வந்து விடும். எனவே நிறுத்தாமல் சென்றாலும் வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், இன்ஸ்பெக்டர்கள் அன்பு பிரகாஷ், அருள்பிரகாஷ், சாய்லட்சுமி, பெர்னார்டு சேவியர் மற்றும், சப்-இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக போலீசாருக்கு இ-செலான் கருவி செயல்படும் விதம், அதனை பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்