தம்பி கண் எதிரே பரிதாபம் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி ஆசிரியை பலி

அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி, தம்பி கண் எதிரேயே மழலையர் பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-08-11 23:00 GMT
தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம், ஸ்ரீ கிருஷ்ணா நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் வலியுல்லா. இவருடைய மகள் ஆயிஷா (வயது 25). இவர், அங்குள்ள ஒரு மழலையர் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம் ஆயிஷா, தனது தம்பி அஜிமுல்லா (19) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தாம்பரம்-முடிச்சூர் பிரதான சாலையில் விஜயலட்சுமி தெரு சந்திப்பு அருகே வந்தபோது, வாலாஜாபாத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அரசு பஸ் இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது ஆயிஷா மீது அரசு பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி அவர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே தனது தம்பி கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். அவரது தம்பி அஜிமுல்லா, காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான ஆசிரியை ஆயிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான மண்ணிவாக்கம், கே.கே.நகர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (51) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுராந்தகத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு (63). இவர், பூந்தமல்லி பாரிவாக்கம் சாலை சந்திப்பில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை டீ குடிப்பதற்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது வேகமாக வந்த கார் மோதியதில் துரைக் கண்ணு அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டிவந்த ரவிச்சந்திரன்(55) என்பவரை கைது செய்தனர்.

அதேபோல், திருநின்றவூரை அடுத்த நடுக்குத்தகையை சேர்ந்தவர் பாளையம்(65). கட்டிடத்தொழிலாளியான இவர், நேற்று காலை சைக்கிளில் திருநின்றவூர்-பெரியபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி, சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த பாளையம், லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முகமது அசாத்(21) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

*நீலாங்கரையில் தோஷம் கழிப்பதாக கூறி, வீட்டில் தனியாக இருந்த சுந்தர்பால் பாண்டியன்(75) என்பவரிடம் நூதன முறையில் 5 பவுன் நகையை மோசடி செய்த உதயகுமார் (37), ஜோசப் (67) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* திருமுல்லைவாயல் அருகே முன்விரோதம் காரணமாக மோகன்பிரசாத் (18) என்பவரை உருட்டுக்கட்டையால் தாக்கிய மாது (21), சிவன்ராஜ் (22), சந்திரபிரகாஷ் (20), திலிப்குமார் (22), கார்த்திக் (24), ஆகாஷ் (21) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

* அம்பத்தூர் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக வருபவர்களிடம் பணம், செல்போனை பறித்ததாக நெப்போலியன்(26), முருகன்(31), பிரகாஷ்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜோஷ்வா என்ற அப்பு(23) கைது செய்யப்பட்டார்.

* ஓட்டேரியை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திகேயனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த ரீகன் என்ற சந்தோஷ்குமார்(20) கைதானார்.

* திருமணம் செய்துகொள்வதாக கூறி வில்லிவாக்கத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணை ஏமாற்றியதாக வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வந்த கொளத்தூரை சேர்ந்த பிரவீன்குமார்(30) கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்