சர்வதேச டி20 போட்டி: வேகமாக ஆயிரம் ரன்களை கடந்து பாபர் அசாமை முந்திய டேவிட் மலான்
சர்வதேச இருபது ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் வேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரர் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்.
ஆமதாபாத்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதலாவது, 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இதனால் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நேற்று நடந்தது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது.
இதனால், இங்கிலாந்து அணிக்கு 225 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் புதிய சாதனை படைத்துள்ளார். அவர், சர்வதேச இருபது ஓவர் போட்டியில் வேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்.
24 போட்டிகளில் விளையாடி மலான் இந்த சாதனையை படைத்துள்ளார். இதனால், 26 போட்டிகளில் விளையாடி இதுவரை முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 27 போட்டிகளில் விளையாடி ஆயிரம் ரன்களை கடந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 3வது இடத்தில் உள்ளார்.
அவர்களுக்கு அடுத்து ஆஸ்திரேலிய அணியின் ஆரன் பின்ச் (29 போட்டிகள்) மற்றும் இந்திய வீரர் கே.எல். ராகுல் (29 போட்டிகள்) உள்ளனர்.