பெண்களே.. கட்டாயம் இதையும் கொஞ்சம் கவனியுங்க!
உயர்தர பருத்தியால் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளைத் தேர்வு செய்வது அவசியம்.
அழகு என்பது வெளிப்புற தோற்றம் சார்ந்தது மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியமும், சுகாதாரமும் கூட அழகின் அடிப்படை விஷயங்களே.
அந்த வகையில் பெண்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது பிறப்புறுப்பு சுகாதாரத்தின் மீதுதான். இதைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
இப்பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசாமல் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை பெண்களிடம் அதிகமாக உள்ளது.
இது, பிற் காலத்தில் பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்தரங்க உறுப்பை சுகாதாரமாக பராமரிப்பதற்கான சில டிப்ஸ்..
* உள்ளாடைகள் உபயோகித்தல்:
நாள் முழுவதும் அணியும் உள்ளாடைகள், ஈரப்பதத்துடன் இல்லாமல், உலர்வானதாக இருக்க வேண்டும். இறுக்கமாக அணியாமல் சற்றுத் தளர்வாக அணிய வேண்டும்.
உயர்தர பருத்தியால் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளைத் தேர்வு செய்வது அவசியம். சிறுநீர் கழித்த பிறகு தண்ணீரால் கழுவி விட்டு பிறப்புறுப்பை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.
இதன்மூலம் நோய்க்கிருமிகளால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கலாம். பிறப்புறுப்பு பகுதியில் முகத்திற்குப் பயன்படுத்தும் பவுடர், கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.
* சானிட்டரி நாப்கினை மாற்றுதல்:
மாதவிடாய் ஏற்படும் நாட்களில், ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் என்பதால், சானிட்டரி நாப்கினை 4 முதல் 6 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
ரத்தப்போக்கு குறைவாக இருந்தாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் நாப்கினை மாற்றுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது. ஒரே நாப்கினை தொடர்ந்து பல மணி நேரம் உபயோகிப்பதால் அரிப்பு, சரும பிரச்சினை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
* சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்த்தல்:
பிறப்புறுப்பு, மிகவும் மிருதுவான பகுதி என்பதால், கடினத் தன்மை கொண்ட சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதன்மூலம் பாதிப்பு ஏற்படுத்தும் பூஞ்சைத் தொற்று ஏற்படக்கூடும். பிறப்புறுப்பு பகுதியை இளம் சூடான நீரால் தூய்மைப் படுத்தலாம்.
* பிரச்சினைகளை உடனே சரிசெய்தல்:
பிறப்புறுப்பு பகுதியில் உள்ள முடிகளை ஷேவ் செய்வது, கத்தரிப்பது போன்ற செயல்களால் காயம் ஏற்படலாம். பாதுகாப்பான முறையில் மட்டுமே, அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
பெண்ணுறுப்பில் ஏதேனும் சிறு மாற்றமோ, பிரச்சினையோ ஏற்பட்டால் அலட்சியமாக இருக்கக்கூடாது. மருத்துவரை அணுகாமல், சுயமாக மருந்து எடுத்துக் கொள்வது பிரச்சினைகளை அதிகமாக்கும். மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.