மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: கடலூர் பாடலி டாக்கீஸ்

Update: 2023-04-06 02:35 GMT

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் அருகே அமைந்து இருந்ததுதான், பாடலி டாக்கீஸ். கடலூரில் கட்டப்பட்ட முதல் திரையரங்கம் என்ற பெருமை அதற்கு உண்டு.

தொழில் அதிபர் பாடலி தண்டபாணி செட்டியார்தான், திரையரங்கின் உரிமையாளர். திருப்பாதிரிப்புலியூர் கோவிலில் அருள் பாலிக்கும் பாடலீசுவரர் பெயரை தியேட்டருக்கு அவர் சூட்ட, அந்தப் பெயரே அவரது பெயரோடும் ஒட்டிக்கொண்டது. அவர் ஒரு காங்கிரஸ்காரர். கடலூர் நகரசபைத் தலைவராக இருந்தவர்.

1947-ம் ஆண்டில் தியேட்டர் கட்டப்பட்டாலும் அதற்கான உரிமம் உடனடியாகக் கிடைக்கவில்லை. அதனால் ஊமைப் படங்கள்தான் திரையிடப்பட்டு வந்தன.

நாடகங்களும் நடத்தப்பட்டன. அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆர்., தன்னுடைய சகோதரர் சக்கரபாணியுடன் சேர்ந்து அங்கு நாடகங்கள் நடித்துள்ளார். பாடலி தண்டபாணியின் வீட்டில் தங்கிச்செல்வதை வழக்கமாகவும் கொண்டிருந்தார்.

1949-ம் ஆண்டு தியேட்டருக்கு உரிமம் கிடைத்ததும் பேசும் படங்கள் திரையிடப்பட்டன.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படம் திரையிடப்படுகிறது என்று அறிந்தால் கூட்டத்திற்கு அளவே இருக்காது. வெகுதொலைவில் இருந்தும் கிராம மக்கள் மாட்டுவண்டி கட்டிக்கொண்டு படையெடுத்து வந்து விடுவார்கள். தியேட்டரில் இடம் இல்லாமல் போனாலும், வந்தவர்களை தியேட்டரின் வெளியே இருக்கைகள் போட்டு ஜன்னல்களைத் திறந்து வைத்தேனும் படம் பார்க்க வைத்துவிடுவார்களாம்.

1978-ம் ஆண்டு 'கிழக்கே போகும் ரயில்' 100 நாட்களைக் கடந்து வெற்றி விழா கண்டது. படத்தில் கதாநாயகனாக நடித்த சுதாகரும், ராதிகாவும் பாடலி தியேட்டருக்கு வந்து வெற்றி விழாவில் பங்கேற்றார்கள்.

எந்தவொரு நடிகர், நடிகை கடலூர் வந்தாலும் பாடலி தண்டபாணியின் வீட்டில் தங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த அளவில் வந்தவர்கள் மனம் நெகிழும் வகையில் அவரது விருந்தும் உபசரிப்பும் இருந்திருக்கின்றன. கடலூர் நகரசபைத் தலைவராக இருந்தபோது 1957-ம் ஆண்டு அவரது வீட்டுக்கு ஒருமுறை பெருந் தலைவர் காமராஜர் வந்ததை அவருடைய குடும்பத்தார் இன்னமும் கவுரவமாகக் கருதுகிறார்கள். 1978-ம் ஆண்டு பாடலி தண்டபாணி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவருடைய மகன்கள் பாண்டியன், சங்கர், பாலசந்திரன் ஆகியோர் இணைந்து தியேட்டரை நிர்வகித்து வந்தனர்.

1989-ம் ஆண்டு பாடலி தியேட்டரில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் படம் திரையிடப்பட்டது. நடிகர் ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த அந்தப் படம், பாடலி தியேட்டரில் 100 நாட்களை கடந்து ஓடியது. வெற்றி விழா கொண்டாட நடிகர் ராமராஜன், கங்கை அமரன், கவுண்டமணி, செந்தில், காந்திமதி மற்றும் படக்குழுவினர் கடலூர் வந்தனர்.

ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்திய பிறகே ராமராஜனையும் படக்குழுவினரையும் பாடலி தியேட்டருக்கு அழைத்துச் செல்ல முடிந்தது.

காலப்போக்கில் கடலூரில், முத்தையா, நியூ சினிமா, பாபு, வேல்முருகன், கிருஷ்ணாலயா என்று புதிய புதிய தியேட்டர்களின் வருகையாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும், பாடலி தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

கடந்த 2001-ம் ஆண்டு அஜித் நடித்த தீனா திரைப்படத்துடன் பாடலி தியேட்டர் தனது திரைப்பயணத்தில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டது. தியேட்டர் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு, சில ஆண்டுகள் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக இருந்தது. தற்போது அதுவும் அகற்றப்பட்டு காலி இடமாகக் கிடக்கிறது! காலம் யாரைத்தான் விட்டது?

Tags:    

மேலும் செய்திகள்