என்னை கவர்ந்த பாடகர்கள்- பாடகி சித்ராவின் மலரும் நினைவு
பாடகி சித்ரா தன்னை கவர்ந்த பாடகர்கள் பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்தார்.;
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை நிகழ்த்திய பாடகி சித்ரா தன்னை கவர்ந்த பாடகர்கள் பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்தார். அவர் கூறும்போது, ''நான் பாடிய முதல் பாட்டு ஜேசுதாசுடன்தான். அவர் ஒரு சங்கீத புதையல். என்னை சொந்த மகள் போல பார்த்துக்கொண்டார். அவருக்கு இசை என்றால் அவ்வளவு பைத்தியம்.
அதேபோல இந்த பூமிக்கு இறங்கி வந்த கான கந்தர்வன் எஸ்.பி பாலசுப்பிரமணியம். அவர் இல்லை என்பதை இன்று வரை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அவர் ரிக்கார்டிங் வந்தால் ஒரு விழா போல இருக்கும். அப்போது வரை அமைதியாக இருந்த சூழல் தலைகீழாக மாறிவிடும். அவர் வந்தவுடன் ஆர்கெஸ்ட்ராவில் உள்ள அனைவரையும் அவரவர் பெயராலேயே அழைத்து விசாரிப்பார். அவர்களின் குடும்ப உறுப்பினர்களை பற்றி கேட்பார். எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார். எனக்கு முதலில் பாட வந்தபோது தெலுங்கு சரியாக தெரியாது. எனது உச்சரிப்பில் ஏதாவது தவறுகள் இருந்தால் அவர் உடனே சரி செய்வார். " என்றார்.