'ராயன்' வெற்றி : தனுஷுக்கு பரிசளித்த கலாநிதி மாறன்
'ராயன்' படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குனர் தனுஷுக்கு இரண்டு காசோலையை படத்தின் தயாரிப்பாளர் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.;
சென்னை,
நடிகர் தனுஷின் 50வது திரைப்படம் ராயன். இதனை அவரே இயக்கி நடித்தும் இருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷிற்கு அவருடைய 25வது படம் வேலையில்லா பட்டதாரி எப்படி அமைந்ததோ, அதே போல் தற்போது 50வது படம் ராயன் மாபெரும் அளவில் வெற்றியை தேடி கொடுத்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்' திரைப்படம் கடந்த 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடித்துள்ளார்.
வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் துஷாரா விஜயனின் 'துர்கா' கதாபாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
தனுஷ் நடித்த படங்களிலே ராயன் அதிகம் வசூலித்த படமாகும். 2024 ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ராயன் வசூலில் முதல் இடம் பெற்றுள்ளது. ராயன் படத்தின் 'வாட்டர் பாக்கெட்' வீடியோ பாடல் 25 மில்லியன் பார்வைகளை கடந்தது. தனுஷுடன் இணைந்து முதல் முறையாக எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார். மேலும் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், சரவணன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், ராயன் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 155 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் நாளை ஓ.டி.டி தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'ராயன்' படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரான தனுஷை அழைத்து ராயன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இரண்டு காசோலையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.