மனைவியுடன் மீண்டும் சேர்ந்த ரஜினி பட வில்லன்
குழந்தைகளுக்காக மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறோம் என்று வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக் கூறினார்.;
பிரபல இந்தி வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இவர், ஆலியா என்பவரை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் நவாசுதீன் சித்திக் மீது ஆலியா குற்றச்சாட்டுகள் சுமத்தி வந்தார். இதுபோல் நவாசுதீன் சித்திக் மீது அவரது சகோதரர் ஷாமாசுதீன் சித்திக்கும் புகார் கூறினார்.
இதையடுத்து தன்னிடம் பணம் பறிக்க இருவரும் முயற்சி செய்வதாக நவாசுதீன் சித்திக்கும் புகார் எழுப்பினார். தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாக அவர்கள் மீது ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கும் தொடர்ந்தார். இந்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் நவாசுதீன் சித்திக் மற்றும் மனைவி ஆலியா இருவரும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். சமீபத்தில் தங்கள் 14-வது திருமண நாளை ஒன்றாக கொண்டாடியும் இருக்கிறார்கள்.
இதுகுறித்து ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'குழந்தைகளுக்காக ஒன்றாக இணைந்திருக்கிறோம். பிரச்சினைகளுக்கு காரணம் மூன்றாம் நபர் தலையீடு தான். இனி அது இருக்காது' என பதிவிட்டுள்ளார்.