நடிகர் கவுண்டமணியிடம் சொத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும்; கட்டுமான நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் கவுண்டமணியின் சொத்தை அவரிடமே திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான 5 கிரவுண்டு 454 சதுர அடி நிலத்தை நடிகர் கவுண்டமணி கடந்த 1996-ம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்ட கவுண்டமணி, அவரது மனைவி சாந்தி, மகள்கள் செல்வி, சுமித்ரா ஆகியோர் முடிவு செய்தனர். இந்த பணியை மேற்கொள்ள ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடியே 4 லட்சத்தை கவுண்டமணி வழங்கியுள்ளார். ஆனால் கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு கட்டுமான பணிகளைத் தொடங்கவில்லை என கூறி அந்நிறுவனத்துக்கு எதிராக கவுண்டமணி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணையின்போது தனியார் நிறுவனம் தரப்பில், "அந்த நிலத்தின் முன்னாள் உரிமையாளரான நளினி பாயிடமிருந்து பொதுஅதிகாரம் பெற்று, அந்த நிலத்தை கவுண்டமணிக்கும், அவரது குடும்பத்துக்கும் விலைக்கு வாங்கி கொடுத்ததே நாங்கள் தான். அவர் கொடுத்த ரூ.1.04 கோடியை அந்த நிலத்தில் இருந்த வாடகைதாரர்களை காலி செய்யவும், வணிக வளாக கட்டுமானத்துக்கான திட்ட அனுமதி பெறவும் செலவிடப்பட்டது. ஒப்பந்தப்படி எஞ்சிய தொகையை வழங்கியிருந்தால் குறித்த நேரத்துக்குள் கட்டுமானத்தை முடித்துக்கொடுத்து இருப்போம்.'' என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக வக்கீல் ஆணையரை நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி ஆய்வு மேற்கொண்ட வக்கீல் ஆணையர் ரூ.46.51 லட்சத்துக்கு மட்டுமே பணிகள் நடந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தார். அதன்படி, அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், "வணிக வளாக கட்டுமானத்துக்கு முடிக்கப்பட்ட பணிகளை ஒப்பிடும் போது ரூ.63 லட்சத்தை கூடுதலாகவே அந்த நிறுவனம் கவுண்டமணியிடம் இருந்து பெற்றுள்ளது. பணிகளை முழுமையாக முடித்துக்கொடுத்தால் மட்டுமே அந்த நிறுவனம் ஒப்பந்தப்படி தொகையைக் கோர முடியும். எனவே கவுண்டமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்தை அவர்களிடமே கட்டுமான நிறுவனம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அந்த கட்டுமான நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடிகர் கவுண்டமணிக்கு சொந்தமான நிலத்தை அவரிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தனர். மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.