அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு
திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜுன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
ஐதராபாத்,
புஷ்பா 2 பட நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தின் பார்க்க சென்றார். அவரை பார்த்தும், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதனால் , இருவரும் மூச்சுப்பேச்சின்றி சுயநினைவு இழந்தனர். இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிறுவன் ஸ்ரீதேஜா தற்போது வரை தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஐதராபாத் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி நடிகர் அல்லு அர்ஜுன் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, 'திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜுன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம்' என குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்ட நெரிசல் நடந்தப்பின்னர் போலீசார் அவரை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு முதலில் படம் முடிந்தவுடன் செல்வதாக கூறி மறுத்துவிட்டார். பிறகு அவரிடம் 'நீங்கள் வெளியேறவில்லை என்றால் கூட்ட நெரிசலில் இரண்டு பேர் சிக்கி மோசமான உடல்நிலையில் இருப்பதற்காக கைது செய்யப்படுவீர்கள்' என்று கூறியதும்தான் வெளியேறியுள்ளார். வெளியேறும்போது கூட மீண்டும் காரின் கூரை கதவில் இருந்து ரோட் ஷோ செய்தார் என்று கூறினார்.
திரையுலகப் பிரபலங்கள் மனிதாபிமானமற்றவர்களாக இருக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும்போது சிறப்பு சலுகைகள் எதுவும் இருக்காது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களை அரசு சும்மா விடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் நான் முதல்-மந்திரியாக இருக்கும் வரை தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்பு காட்சிகள் கிடையாது" என்று ரேவந்த் ரெட்டி அதிரடியாக கூறியுள்ளார்.