விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'சூப்பர் மேன்' பட டீசர்

'சூப்பர் மேன்' பட டீசர் இந்தியாவில் உள்ள டி.சி ரசிகள், குறிப்பாக விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Update: 2024-12-22 02:46 GMT

சென்னை,

'மார்வெல்' நிறுவனத்திற்காக 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன், தற்போது டி.சி. நிறுவனத்துக்காக புதிய 'சூப்பர் மேன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் 'சூப்பர் மேன்' கதாபாத்திரத்தில் நடிகர் டேவிட் கோரன்ஸ்வெட் நடித்துள்ளார். 'லெக்ஸ் லூதர்' என்ற வில்லனாக நிக்கோலஸ் ஹோல்ட், கதாநாயகி லூயிஸ் லேன் கதாபாத்திரத்தில் ரச்சேல் புரோஸ்நாகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து டி.சி. நிறுவனத்திற்கு அடுத்தடுத்த சூப்பர் ஹீரோ படங்கள் வரிசையாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 'சூப்பர் மேன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி வெளியாக உள்ளநிலையில், அண்மையில் 'சூப்பர் மேன்' படத்தின் டீசர் வெளியானது.

இந்த டீசர் இந்தியாவில் உள்ள டி.சி ரசிகள், குறிப்பாக விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஏனென்றால், டீசரின் முதல் காட்சியில் சூப்பர்மேன் காயம்பட்டு, பனியில் படுத்து இருக்கிறார். அப்போது அவரது விசுவாசமான தோழரான கிரிப்டோவுக்கு விசில் அடித்து, அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்துகிறார். இதனுடன், 'லியோ' படத்தில் கழுதைப்புலியுடன் விஜய் சண்டையிட்டு அதை வீழ்த்தி பின்னர் பனியில் படுத்திருக்கும் காட்சியுடன் ஒப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்