'கருடன்' படத்தின் டிரைலர் வெளியானது

நடிகர் சசிகுமார், சூரி நடிப்பில் உருவான 'கருடன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.;

Update: 2024-05-21 10:33 GMT

சென்னை,

நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் கருடன். இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

படத்துக்கான கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத, துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படம் மே 31-ம் தேதி வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் டிரைலரை சற்று முன் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நம்ம ஆசைப்பட்ட விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ இயற்கையோ அதை சரியான வழியில முடிச்சி வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திக்கிட்டு இருக்கு என்கிற பின்னணி குரலுடன் டிரைலர் தொடங்குகிறது.

சசிகுமார் மற்றும் உன்னிமுகுந்தன் மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். உன்னி முகுந்தனுக்கு கீழ் வேலை செய்யும் விசுவாசியாக இருக்கிறார் சூரி. உன்னி முகுந்தனுக்காக எந்த எல்லைக்கும் சென்று எந்த வேலையையும்  செய்பவராக காட்சிகள் அமைக்கபட்டிருக்கிறது. டிரைலர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது,சூரி மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்