முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் மனு - கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் துனியா விஜய் மனு தாக்கல் செய்திருந்தார்.;
பெங்களூரு,
முதலாவது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய நடிகர் துனியா விஜயின் மனுவை பெங்களூரு குடும்ப நல கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கன்னட திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துனியா விஜய். அவர் முதலாவதாக நாகரத்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, துனியா விஜய் முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமல் 2-வதாக கீர்த்தி கவுடா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு முதலாவது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி பெங்களூரு சாந்திநகரில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் துனியா விஜய் மனு தாக்கல் செய்தார். தன்னை மனைவி கொடுமை செய்வதால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது என்றும், அதனால் விவாகரத்து வழங்குமாறும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை பெங்களூரு குடும்ப நல கோர்ட்டில் நடந்து வந்தது.
அந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் துனியா விஜய், விவாகரத்து கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார். விவாகரத்துக்காக தனது மனைவி மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
சமீப காலமாக கன்னட திரைத்துறையில் விவாகரத்துகள் அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடகர் சந்தன்ஷெட்டி-நடிகை நிவேதிதா கவுடா ஆகியோர் பரஸ்பர ஒப்புதலின் பேரில் விவாகரத்து பெற்றனர். அதே போல் நடிகர் யுவராஜ்குமார் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.