கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராமுக்கு செவாலியர் விருது

கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.;

Update: 2022-10-31 11:31 GMT

பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய-பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக பிரான்ஸ் அரசின் கலாசார மந்திரி ரீமா அப்துல் மலாக் அறிவித்துள்ளதாக சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதர் லிஸ் டால்போட் பாரே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ''இந்த விருது பிரெஞ்சு மற்றும் சர்வதேச கலை உலகிற்கு அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்புகளுக்கு எங்கள் நாட்டின் பாராட்டுக்கான அடையாளமாகும். கர்நாடக இசையின் அற்புதமான அழகையும், நுணுக்கத்தையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் அருணா சாய்ராம் பரப்பி உள்ளார். அவரது செயல்பாடு மற்றும் படைப்புகள் மூலம் கர்நாடக இசை உலகில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்" என்றார்.

இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து அருணா சாய்ராம் கூறும்போது, "ஒரு இசைக்கலைஞராகவும், நமது நாட்டின் கலாசார வாரிசாகவும் எனது கடமையை செய்ததற்காக இதுபோன்ற ஒரு உயரிய விருதை பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், நான் செய்து வரும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான கூடுதல் பொறுப்பையும் இது வழங்குகிறது. பிரான்ஸ் அரசாங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார். அருணா சாய்ராம் இந்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மியூசிக் அகாடமி சார்பில் சங்கீத கலாநிதி விருதையும் பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் மத்திய பிரதேசத்தின் காளிதாஸ் சம்மான் விருதும் பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்