யோகி பாபுவின் 'போட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள ‘போட்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.;

Update: 2024-07-08 12:15 GMT

சென்னை,

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக யோகி பாபு நடிப்பில் பூமர் அங்கிள் திரைப்படம் வெளியானது. மேலும் யோகி பாபு, மண்ணாங்கட்டி, சட்னி சாம்பார், வானவன், ஜோரா கைய தட்டுங்க போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதற்கிடையில் யோகி பாபு, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் 'போட்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் யோகி பாபுவுடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் சிம்பு தேவன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைக்க மாதேஷ் மாணிக்கம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார்.

காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ஒரு சர்வைவல் திரில்லர் படமாகும். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தை தமிழ்நாட்டில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது ஜப்பான், சென்னையில் குண்டு போட்ட போது, ஒரு சிலர் ஒரு படகில் இந்தியாவில் இருந்து தப்பிச்செல்ல முடிவெடுத்து கடலில் செல்கின்றனர். அப்போது திடீரென படகில் ஓட்டை விழுகிறது, இதனால் ஏற்படும் பிரச்சனை, அவர்களுக்குள் ஏற்படும் அடிதடி, அதன் பின்னர் ஏற்படும் திருப்புமுனை ஆகியவைதான் இந்த படத்தின் கதை என்பது சற்று முன் வெளியாகியுள்ள வீடியோவில் இருந்து தெரிய வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்