சென்னை கொரட்டூரில் சாய்பாபா கோவில் கட்டிய நடிகர் விஜய்
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதாக கூறப்படுகிறது.;
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் குதித்துள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்து உள்ளார். தற்போது நடித்து வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்துக்கு பிறகு இன்னொரு படத்தில் மட்டும் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகி முழுமையாக அரசியலில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் விஜய் சென்னை கொரட்டூரில் புதிதாக சாய்பாபா கோவிலை கட்டி கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்துள்ள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. சுமார் 15 கிரவுண்டில் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் கலந்து கொண்டனர்.
ஷோபா சந்திரசேகர் தீவிர சாய்பாபா பக்தர் என்பதால் தாயாருக்காக இந்த கோவிலை விஜய் கட்டியதாக கூறப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்கள். சாய்பாபா கோவிலில் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.