'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு மேலும் 2 சர்வதேச விருது
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ‘கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்டு' விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளில் மேலும் 2 சர்வதேச விருதுகள் ஆர்ஆர்ஆர் படத்துக்கு கிடைத்துள்ளது.;
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு'பாடல் ஆஸ்காருக்கு அடுத்த உயரிய விருதாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருதை வென்றது.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 'கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்டு' விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளில் மேலும் 2 சர்வதேச விருதுகள் ஆர்ஆர்ஆர் படத்துக்கு கிடைத்துள்ளது. ராஜமவுலி நேரில் சென்று இந்த விருதுகளை பெற்றுக்கொண்டார்.
'ஆர்ஆர்ஆர்' படம் ஆஸ்கார் போட்டிக்கும் அனுப்பப்பட்டு தகுதி பட்டியலில் இடம்பெற்று உள்ளது. தொடர்ந்து விருதுகளை பெற்று வரும் நிலையில் ஆஸ்கார் போட்டியில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆர்ஆர்ஆர் படத்தை 2 முறை பார்த்து தன்னிடம் பேசியதாக ராஜமவுலி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.