2500 அடி உயர மலை மீது ஆலயம்.. வற்றாத நீரூற்று: வியப்பில் ஆழ்த்தும் திரிம்பகேஸ்வரர் கோவில்


Trimbakeshwar Shiva Temple, Maharashtra
x

நீரூற்றில் இருந்து திரிம்பகேஸ்வரர் கோவில் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தின் மீது எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.

மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் திரிம்பக் என்ற இடத்தில் உள்ளது திரிம்பகேஸ்வரர் திருக்கோவில். இந்தக் கோவில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவன், 'திரிம்பகேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. பிரம்மகிரி, நீலகிரி, கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு நடுவில், பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் பில்வ தீர்த்தம், விஸ்வநந் தீர்த்தம், முகுந்த தீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன.

கோவிலின் நாற்புறமும் உயர்ந்த மதில்கள், அதில் நான்கு வாயில்கள் உள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டில் மூன்றாம் பேஷ்வாவான நானாசாகிப் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. கோவிலின் கருவறையின்மேலே வாழைப்பூ வடிவில் கூம்பான விமானம் அமைந்துள்ளது. அதன் உச்சியில் தங்கக் கலசமும், சிவனின் சூலமும் அமைந்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலை மீது அமைந்த இவ்வாலயத்தில், பல நூறு ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய நீரூற்று ஒன்று உள்ளது. கோவிலின் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தின் மீது எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும். இப்பகுதியில் வாழ்ந்த கவுதம முனிவர், கடுமையான தவத்தை மேற்கொண்டார். அவருக்காக சிவபெருமான் தன் ஜடாமுடியில் இருந்து கங்கையின் சில துளியை விழச் செய்ததாகவும், அதுவே இங்கு நீரூற்றாக வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பிற ஜோதிர் லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டவை. ஆனால், இத்தலத்தில் உள்ள சிவலிங்கமானது, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் அமைப்பில் இருப்பது தனித்துவமான சிறப்பு. திரிம்பகேஸ்வரர் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது. இத்தல லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது. அதன் நடுவே உரல் போன்று பள்ளம் மட்டுமே சிவலிங்கமாக பாவிக்கப்படுகிறது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் காணப்படுகிறது.


Next Story